Tuesday, September 3, 2013

கணினி ஆசிரியர்கள் நியமனம் எப்போது? பிளஸ் 2 மாணவர்கள் எதிர்பார்ப்பு

மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த கணினி ஆசிரியர்கள், 652 பேரை, அரசு பணிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, பிளஸ் 2 கணினி பிரிவு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது என, மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக் கின்றனர்.

ஒப்பந்த அடிப்படையில், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த கணினி ஆசிரியர்கள், சிறப்பு தேர்வு அடிப்படையில், பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். தேர்வில் தகுதி மதிப்பெண் பெறாதவர்களை பணிநீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தமிழக அரசு, 652 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தது.

இதனால், பல பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம், பகுதிநேர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் தான் தற்போது, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.

இந்த ஆசிரியர்கள், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான, மாணவர்களுக்கு பாடம் நடத்த நியமிக்கப்பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் கணினி பட்டயம் பெற்றவர்கள்.

மேல்நிலை வகுப்புகளுக்கு பாடம் நடத்த பி.எட்., பட்டாதாரிகளை நியமிக்க வேண்டும் என்பது விதிமுறை. பெரும்பாலான பள்ளிகளில் பகுதிநேர கணினி ஆசிரியர்களும் நியமிக்கப்படாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. சில இடங்களில், மாற்றுப் பணியாக அருகில் உள்ள பள்ளிகளின் ஆசிரியர்களை கொண்டு வாரத்தில், இரண்டு நாட்கள் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. 

நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாவிட்டால், அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கவும் மாணவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கணினி ஆசிரியர்கள் நியமனம் குறித்து ஆலோசித்து வருகிறோம். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்," என்றார்.

நன்றி : http://www.teachertn.com/
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

No comments:

Post a Comment