Tuesday, September 17, 2013

தமிழக பள்ளிகளில், கணினி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கில், வழக்கறிஞர்களின் வாதம் நேற்று முடிந்தது. மனுக்கள் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

தமிழ்நாடு, கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட, கோர்ட் அவமதிப்பு மனுவை, நீதிபதிகள் பானுமதி, சசிதரன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: கூடுதல் அட்வகேட் ஜெனரல், "652 காலியிடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப வேண்டும். முதலில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து, ஒன்றுக்கு ஐந்து என்கிற விகிதத்தில், 3,500 பேர் அடங்கிய பட்டியல் பெறப்பட வேண்டும். மாநிலம் முழுவதிலும் இருந்து பட்டியல் பெற, கணிசமான நேரம் தேவை. தேர்வு நடவடிக்கைகளை முடிக்க, ஆறு மாதம் வழங்க வேண்டும்' என்றார். தேர்வு நடவடிக்கைகளை உடனடியாக, அரசு துவங்க வேண்டும். இரண்டு மாதங்களில், கணிசமான பகுதியை முடிக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்குப் பின், வழக்கை பட்டியலிட வேண்டும். அதற்குள், நடவடிக்கை அறிக்கையை, பள்ளி கல்வித் துறையின், முதன்மை செயலர் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், கணினி ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து, பலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை, நீதிபதிகள் பானுமதி, சசிதரன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. ஆசிரியர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சிலர், "புதிதாக, கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, தற்போது பணியில் இருப்பவர்களை தொடர அனுமதிக்க வேண்டும் என, தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதை பின்பற்றாமல், பணியில் இருந்து நீக்கி உள்ளனர்' என்றனர். பள்ளி கல்வித் துறை சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "இரண்டு முறை வாய்ப்பு வழங்கியும், 50 சதவீத மதிப்பெண்களை, மனுதாரர்கள் பெறவில்லை. சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் தான், 652 பேர், பணி நீக்கம் செய்யப்பட்டனர்' என, கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட்-ஜெனரல் அரவிந்த் பாண்டியன், சிறப்பு அரசு பிளீடர்கள் கிருஷ்ணகுமார், வேலுமணி ஆஜராகினர். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இவ்வழக்கின் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், "டிவிஷன் பெஞ்ச்' தள்ளிவைத்தது.

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

No comments:

Post a Comment